நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் எந்தப்படமும் ரிலீசாகாத நிலையில், பதான் படம் வெளியாகி சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. துவண்டிருந்த பாலிவுட் திரையுலகத்தை பதான் மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் இரட்டை வேடங்களில் கலக்கும் ஜவான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார் இயக்குநர் அட்லி. விஜய்யின் அடுத்தடுத்த 3 படங்களை ஹாட்ரிக் ஹிட்டாக கொடுத்த அட்லிக்கு ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதை தற்போது சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் அட்லி. இந்தப் படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய பதான் படத்தின் வசூலை, ஜவான் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மும்பையிலேயே தங்கி இந்தப் படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இவரை மும்பை ஏர்போர்ட்டில் காணமுடிந்தது. இந்தப் படம் துவங்கிய பின்புதான் நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். நயன்தாராவின் திருமணத்திற்கு ஷாருக்கான் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
படத்தில் யோகிபாபு உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில், படத்திற்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். படத்தின் பிஜிஎம் உள்ளிட்டவை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக அனிருத் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தான் சிறுவயதில் இருந்தே, ஷாருக்கின் படங்களை பார்த்து வளர்ந்தவன் என்றும் அவரின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜவான் படத்திற்காக தான் அமைத்துள்ள பிஜிஎம் வேற லெவலில் அமைந்துள்ளதாகவும், இதுவரை தான் அமைத்துள்ள பிஜிஎம்மில் இதுதான் பெஸ்ட் என்றும் கூறியுள்ள அனிருத், இந்த இசைக்கோர்ப்பை தான் ஷாருக்கிற்காக ஸ்பெஷலாக டெடிகேட் செய்துள்ளதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். ஜவான் படம் கண்டிப்பாக இந்திய அளவில் மிகச்சிறந்த படைப்பாக வெளியாகி வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
