இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. சிம்பு படம் என்று ப்ரோமோட் செய்யப்பட்ட பத்து தல படத்தில் பாதிக்கு மேல் தான் சிம்புவே வருகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிம்புவின் பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் தனுஷின் வாத்தி பட வசூலை முறியடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. சிம்புவின் பத்து தல படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. இதுவரை சிம்புவை இப்படியொரு மாஸான ரோலில் யாருமே காட்டவில்லை என இயக்குநர் ஒபிலி கிருஷ்ணாவை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும், மஃப்டி அளவுக்கு கூட இந்த படத்தை இயக்குநர் தரமாக உருவாக்கவில்லை என மறுபக்கம் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்
பத்து தல படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய டிரெண்டிங் நேற்று மொத்தமாகவே ரோகிணி தியேட்டரில் நடந்த அந்த தீண்டாமை சர்ச்சை காரணமாக முற்றிலுமாக மாறியது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக கூறுகின்றனர். ரோகிணி தியேட்டரையே புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் தொடர்ந்து கொதித்து வருகின்றனர்.
ஆடியோ லாஞ்ச் எல்லாம் வைத்து சிம்பு கொடுத்த பில்டப்புக்கு படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து தல படத்தின் முதல் வசூல் வெறும் 5 முதல் 6 கோடி தான் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படத்திற்கு இதுவே பெரிய வசூல் சாதனை தான் என நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் கிண்டல் செய்து வருகின்றனர்.
சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையே சினிமாவில் தொழில் ரீதியான போட்டி நிலவி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான தனுஷின் வாத்தி படத்தின் வசூலை சிம்புவின் பத்து தல படம் முந்தவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. வாத்தி திரைப்படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஒட்டுமொத்தமாக 100 கோடி வசூலையும் வாத்தி படம் கடந்த நிலையில், பத்து தல படம் 100 கோடி வசூல் சாதனையை படைப்பது ரொம்பவே கஷ்டம் என ரிப்போர்ட்டுகள் வெளியாகி வருகின்றன.
