மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது பத்து தல. சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்து தல படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. நம்ம சத்தம் எனத் தொடங்கும் அந்தப் பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியிருந்தார். சிம்புவுக்கு மாஸ் காட்டும் விதமாக நம்ம சத்தம் பாடல் உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது செகண்ட் சிங்கிள் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. கபிலன் வரிகளில் நினைவிருக்கா எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஏஆர் அமீன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற காதலனும் காதலியும் மீண்டும் சந்திக்கும் சூழலை பின்னணியாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளதாம். இந்த காட்சியை இயக்குநர் கிருஷ்ணா ஏஆர் ரஹ்மானுக்கு விளக்க, அதற்கு அவர் ட்யூன் போடுகிறார், கபிலன் பாடல் வரிகளை எழுதுகிறார்.
அப்போது கொஞ்சம் ஃபிரஷ்ஷான வாய்ஸ் இந்தப் பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என கூறும் கிருஷ்ணா, ஏஆர் அமீன் பாடுவாரா என ரஹ்மானிடம் கேட்கிறார். உடனே ஸ்பாட்டுக்கு வரும் ஏஆர் அமீன், நினைவிருக்கா பாடலை பாடும் க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.
பத்து தல படத்தின் முதல் பாடலை ஏஆர் ரஹ்மான் பாடிய நிலையில், செகண்ட் சிங்கிளை அவரது மகன் ஏஆர் அமீன் பாடியுள்ளார். இது ஏஆர் ரஹ்மான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்து தல செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியானதில் இருந்தே சிம்பு டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டார். முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் சிம்புவின் 48வது படம் குறித்த அப்டேட் வெளியானது. STR 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள பத்து தல வரும் 30ம் தேதி வெளியாகிறது. தற்போது வெளியான செகண்ட் சிங்கிள் அப்டேட்டை தொடந்து, பத்து தல ட்ரெய்லரும் விரைவில் ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மார்ச் 18ம் தேதி பத்து தல இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேநேரம் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளதால், பத்து தல இசை வெளியீட்டு விழா நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.