சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ஆரி, பிரியா பவானி சங்கர், ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ’நம்ம சத்தம்’ பாடலை நடனமாடி கொண்டே ஏ.ஆர்.ரகுமான் நேரலையாக பாடினார். தொடர்ந்து பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக மேடையில் பாடப்பட்டன. ’நினைவிருக்கா’ என்ற பாடலை ஏ.ஆர்.அமீன் பாட ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பியானோ வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஏஜி ராவணன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மணல் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் பத்து தலை ராவணனாகவே ஒரு ஆட்டம் ஆடியுள்ளார். குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் வரும் துரோகமும், துரோகியும் ஏஜிஆர்-க்கு புதுசா என்ன என்று பேசும் போது சரவெடியாக இருக்கிறது.
அதேபோல் சிம்புவின் அடியாள் கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதலமைச்சரவை காணவில்லை என்று தொடங்கும் ட்ரெய்லரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சிம்புவை எதிர்க்கும் அரசியல்வாதியாக கவுதம் மேனன், சிம்புவை எதிர்க்கும் அரசு அதிகாரியாக பிரியா பவானி சங்கர், அரசியல் ஆசையில் வலம் வரும் சார்பட்டா பரம்பரை சந்தோஷ் என களம் தயாராக உள்ளது.
டீசர் வெளியிட்ட போது, சிம்பு நிச்சயம் இது பெரிய பாய் சம்பவமாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார். அதற்கேற்ப ஏஆர் ரஹ்மான் மிகப்பெரிய சம்பவத்தை பிஜிஎம்மில் செய்து காட்டியுள்ளார். கூடவே ஏஆர் அமீனும் இருக்க, படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படம் முழுக்க தொட்டி ஜெயா படத்தின் வரும் கருப்பு சட்டை கருப்பு வேஷ்டியோடு சிம்பு அதகளம் செய்திருக்கிறார். அதனால் பத்து தல படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
