ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அண்ணன் தங்கை செண்டிமென்ட் கொண்ட இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். நயன்தாரா, மீனா, குஷ்பு, லிவிங்ஸ்டன், சூரி என பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால், தனது அடுத்தபடம் ரசிகர்களை கவரும் வகையில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய ரஜினிகாந்த் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு, கடைசியாக கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாரை தேர்வு செய்தார்.
ரஜினியின் 169வது படமான இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினி ஆசைப்பட்டது போலவே, அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடந்தது. இதில், ரஜினி மற்றும் ஜாக்கி ஷெராஃப் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பின் பெங்களுரில் படப்பிடிப்பு நடந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளரான ராக்ஸ்டார் அனிருத் பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் விதமாக ஜெயிலர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னிங் படமாக இப்படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடிப்பதாக இணையத்தில் பரவி வரும் தகவல் குறித்து விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன், ஜெயிலர் படத்தில் தான் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை படம் வெளியானதும் ஒரு ரசிகராக மட்டுமே திரையில் ரஜினிகாந்த்தை ரசித்து பார்ப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
