கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, வஸந்த் ரவி, ரோபோ சங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பின்னணி பணிகளை முடித்து இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரஜினியின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகும் ஜெயிலர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுதி உள்ள நிலையில், விரைவில் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
