சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு சூர்யா 42 என்று அழைத்து வருகிறார்கள். அந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் சேர்ந்து யுவி கிரியேஷன்ஸும் சூர்யா 42 படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.எஸ்.பி. இசையமைக்கிறார். சூர்யா 42 படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அந்த படத்தில் 5 கதாபாத்திரங்களில் வருகிறாராம் சூர்யா. ஒரு சூர்யாவை பார்த்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். இதில் 5 கதாபாத்திரங்கள் என்றால் சொல்லவா வேண்டும்.
ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கப் போகிறது.படத்தில் 12 கெட்டப்புகளில் வந்து அசத்தப் போகிறாராம் சூர்யா. படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து வந்தாலும் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறார்களாம். இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 500 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல், சாட்டிலைட், இசை, தியேட்டர் உரிமைகள் எல்லாம் ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சூர்யா அடுத்ததாக ‘சீதாராமம்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யாவை சந்தித்து இயக்குநர் ஹனு ராகவபுடி ஒரு அருமையான கதையை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்ததாகவும் அதனால் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் ஏற்கனவே ‘சீதாராமம்’ எனும் தரமான படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே சமயம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
