மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் விக்னேஷ் சிவன்
அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஏகே 62 படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஏகே 62 படம் தொடர்பான டிவிட்டுகள் மற்றும் அஜித்தின் படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இதனால் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும், ஏகே 62 படத்தை தடம் பட இயக்குநரான மகிழ் திருமேனிதான் இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மகிழ் திருமேனி கூறிய இரண்டு கதைகளும் அஜித்துக்கு பிடித்து போனதாகவும், முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஏகே 62 படம் குறித்த அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விக்னேஷ் சிவன், ஏகே 62 படம் வெளியாவதற்குள் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
மேலும் நம்பர் ஒன் நடிகையான தனது மனைவி நயன்தாராவை வைத்தே படத்தை இயக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் புதிய தகவலாக இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய் சேதுபதியிடம் கதை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையெல்லாம் தாண்டி, விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்குள் நல்ல நட்பும் உள்ளது.
இந்த நெருக்கடியான நேரத்தில் விஜய் சேதுபதியை இயக்கலாம் என முடிவு செய்த விக்னேஷ் சிவன், அவரிடன் ஆக்ஷன் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம். கதையை கேட்ட விஜய் சேதுபதியும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கவும் விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த காம்போ மீண்டும் இணைந்தால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் ஹிட் கிடைக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.