நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட படங்கள் மூலம் 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை மீனா 40 ஆண்டுகள் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக தென்னிந்திய ஸ்டார் நடிகர்களுடன் நடித்து தானும் ஒரு சிறந்த ஸ்டாராக மாறி ஏகப்பட்ட ரசிகர்கள் மனங்களில் நிறைந்துள்ளார். அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் சமீபத்தில் 40வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
நடிகை மீனாவின் 40வது ஆண்டு சினிமா விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில், நடிகைகள் ராதிகா, ரோஜா, சினேகா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இசையமைப்பாளர் தேவா, நடிகர் பிரசன்னா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் மீனாவை பற்றி பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடன் பல படங்களில் மீனா நடித்துள்ள நிலையில், மீனா 40 நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலமாக மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீனா பற்றி பேசியது தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
சும்மா சப்பியா.. பன் மாதிரி இருப்பா மீனா என மேடையேறிய ரஜினிகாந்த் பேசிய ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என ஆரம்பித்து மேடையில் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கேட்டு ரஜினிகாந்திடம் நெற்றியில் முத்தம் வாங்கிக் கொண்ட மீனாவின் மகள் நைனிகாவின் குறும்புத்தனத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த பொண்ணா இப்படி வளர்ந்து விட்டார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, மீனாவுக்கு அப்படியொரு சோகம் நடந்து விட்டது என ரஜினிகாந்த் பேசி ஆறுதல் சொல்லும் நிலையில், மீனாவுக்கு அப்படி நடந்திருக்ககூடாது என பல பிரபலங்களும் கணவர் வித்யாசாகரை இழந்து தவிக்கும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளனர்.
