இயக்குனரும், நடிகருமான தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவல்துறையை விட்டு வெளியேறிய அவர், இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அசுரன் ஜெய் பீம் போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இதை எடுத்து இயக்கத்தில் கவனம் செலுத்திய அவர், விக்ரம் பிரபு உடன் இணைந்து டாணாக்காரன் படத்தை இயக்கினார். ஓடிடியில் நேரடியாக வெளியான இந்த திரைப்படம், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத சொல்லப்பட வேண்டிய ஒரு `போலீஸ்’ கதையை கூறியது. ‘டாணாக்காரன்’காவல்துறை அதிகாரத்தின் மூர்க்கத்துக்குப் பின்னான காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் நிஜ சினிமா.
விதவிதமான போலீஸ் கதைகளை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு அறிமுக இயக்குநர் தமிழ் வேறொரு கோணத்தில் எடுத்த பரேடே இப்படம். காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளால் எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு திமிறி எழாமல் அமைதியாக காரியத்தை முடிக்கும் விக்ரம் பிரபுவை தனித்துக் காட்டியது இந்தத் திரைப்படம்.
காவல்துறை அதிகாரிகள் ஏன் இவ்வளவு மூர்க்கமாகவும், சாமானியர்களை ஏளனமாகவும் பார்க்கிறார்கள் என்பதற்கு பின்னிருக்கும் உளவியல் குறித்து பாடம் சொன்ன ‘டாணாக்காரன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இயக்குனர் தமிழ், அடுத்ததாக ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறும் இந்த படம், ராமேஸ்வரத்தில் 1960களில் நடக்கும் காலகட்டத்தை பிரதிபலிக்க இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் சிம்பு, தனுஷ், கார்த்தி ஆகியோருடன் இயக்குனர் தமிழ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள், இது மட்டும் நடந்தால் திரையரங்குகள் திருவிழாவால் கொண்டாடும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
