தெலுங்கு முன்னணி நடிகராக வலம் வருபவர் சர்வானந்த். இவர் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் அவருக்கு கடந்த ஜனவரி மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமண தேதி விரைவில் அறிவிப்பதாக இருந்த நிலையில், சர்வானந்த்-ரக்ஷிதா ரெட்டி திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவின. தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் வதந்தி பரவியது.
இணையத்தில் பரவிய வதந்தியை அடுத்து, குடும்பத்தினர் கூடி ஜூன் 3ந் தேதி திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதால், திருமண ஏற்பாடுகளை நடிகர் சர்வானந்த் மும்முரமாக கவனித்து வந்தார்.
நடிகர் சர்வானந்த் நேற்றிரவு ஐதராபாத்தில் உள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்த போது, கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் அதிவேகத்தில் மோதியதில் காரின் ஏர்பேகுகள் வெளியானது. இதில் லேசான காயம் அடைந்த சர்வானந்த் தானாகவே காரில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் சர்வானந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிலிம் நகர் சாலையில் அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சர்வானந்தின் காரை பறிமுதல் செய்தனர். திருமணம் நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், சர்வானந்த் விபத்தில் சிக்கி உள்ளது இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.