நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விஜயின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் அட்லி, கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் எதிர்பாராத டிவிஸ்ட்டாக யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் ஏஜிஎஸ்ஸின் 25வது படம் எனவும் சர்வதேச தரத்துடன் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கீதை படத்துக்கு பிறகு இந்தப் படத்துக்காக விஜய்யுடன் யுவன் இணையவிருக்கிறார்.
இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் படம் அடுத்த ஆண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி படபூஜை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றைய தினமே வெளியிட திட்டமில்லையாம். லியோ படக்குழு செய்ததை போல, ஷூட்டிங் தொடரங்கும் போதே பூஜை தொடர்பான வீடியோக்களை வெளியிட போகிறார்களாம்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜயுடன் இணையும் படத்தின் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
