தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே தொகுதிவாரியாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை அவர் நேரில் சந்தித்தார்.
இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகிவந்த நிலையில், மாணவர்களை விஜய் சந்தித்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடபெற்றது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய்யுடன் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும், சுமார் 1,500 மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் விஜய் மேடையேறி மாணவர்கள் முன்னிலையில் உரையாடினார். ரொம்பவே சிம்பிளான காஸ்ட்யூமில் க்யூட்டாக பேச்சைத் தொடங்கிய விஜய், கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்தார். அப்போது அவர் தனுஷின் அசுரன் பட வசனத்தை மாணவர்கள் முன்பு பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஹிட்டன அசுரன் படத்தில், “காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, பணம் இருந்தா புடுங்கிடுவானுங்க, படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது” என்ற வசனம் இடம்பெற்றிருக்கும். இந்த வசனத்தை அப்படியே மேடையில் பேசிய விஜய், இது என்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிட்டார். மேலும் இந்த வசனம் நூற்றுக்கு நூறு உண்மையானது எனவும் கூறினார்.
மாணவர்களை சந்தித்த நிகழ்ச்சியில் தனுஷ் படத்தின் வசனத்தை பேசி மாஸ் காட்டிய விஜய்யின் இந்த செயல் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்யின் புதிய லுக்கும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.