Sunday, December 10, 2023
- Advertisement -
HomeEntertainmentபுர்கா படத்தை தொடர்ந்து ஃபர்ஹானா படத்திற்கும் எதிர்ப்பு… எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல… ஃபர்ஹானாவுக்கு...

புர்கா படத்தை தொடர்ந்து ஃபர்ஹானா படத்திற்கும் எதிர்ப்பு… எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல… ஃபர்ஹானாவுக்கு தடை போடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இவர் மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ளார். தனது குழந்தைகளுக்காக கலாச்சார கட்டுப்பாடுகளை மீறி வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட ‘புர்கா’ என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் புர்கா படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

- Advertisement -

புர்கா திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து ‘ஃபர்ஹானா’ என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக இதில் வசனங்கள் வருகின்றன. மேலும் இந்த இரண்டு படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

- Advertisement -

புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுன், நடிகர் கலையரசன், நடிகை மிர்னா, பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர் செல்வராகவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், ‘ஃபர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும் ” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியன் லீக் கட்சி சார்பில் பர்கானா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து நிலையில், தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular