பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாதிய ஒடுக்குமுறைகளை பேசிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாரி செல்வராஜ் மூன்றாவதாக இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்தது. அண்மையில் வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடும் முன்னோட்டத்தில், ஒவ்வொரு சீனையும் இயக்குனர் மாறி செல்வராஜ் பார்த்து பார்த்து வடிவமைத்து இருப்பது, காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக, முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
“இங்க மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா, நமக்கு பைத்தியம்தான் பிடிக்கும்” என்ன கீர்த்தி சுரேஷ் பேசும் வசனமாகட்டும், இந்த இடத்துக்கு நம்ம எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம்னு தெரியுமா என பகத் பாசில் கூறும் வசனங்களும் படத்தை கவனிக்க செய்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக, “என்னடா பண்ணுவீங்க, ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா” என்று உதயநிதி ஸ்டாலின் பேசும் வசனம், மாமன்னனின் முக்கிய காட்சியாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். ட்ரெய்லர் மூலம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.