வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. வாரிசு படத்தினை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமிழ் இசையமைக்கிறார். வாரிசு படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் திரையிடப்பட உள்ளது.
மேலும் குடும்ப கதைகளத்தை தழுவிய இப்படத்தில் விஜய் உடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம் பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா என பல தென்னிந்திய நடிகர்கள் பலர் நடித்திருக்கின்றனர். இந்த ‘வாரிசு’ திரைப்படம் காவலன் மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் இரண்டு படங்களின் கலவையாக இருக்கும் என்று சில கணிப்பு செய்திகள் வெளிவந்தன. படகுழுவினரும் இதற்கு மவுனம் காத்து வருகின்றனர்.
தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரில் வெளியாகும் இப்படம், தெலுங்கில் ‘வாரிசுடு’ எனப் பெயரிடப்பட்டு வெளியாகிறது. தமிழில் வெளியாகும் அதே பொங்கல் தினதன்று தெலுங்கிலும் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது ஆந்திராவில் சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கலுக்கு பிரபாஸ் நடித்து பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘ஆதி புருஷ்’ மற்றும் பாலகிருஷ்ணாவின் 107வது படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் தியேட்டர் கிடைப்பதற்கு பிரச்சினை ஏற்படலாம்.
இந்நிலையில், விஜயின் வாரிசுடு படமானது சங்கராந்தி முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்படும் என டோலிவுட்டில் பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. தமிழில் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.