ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் வேல்ராஜ். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 31ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
வெற்றிமாறனின் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் முதலில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததால் அதன் பட்ஜெட் எகிறியது. அதனால் சிறிது தாமதமான விடுதலை படத்தின் முதல் பாகத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தான் நிறைவு பெற்றன. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகின. பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. இந்த மேக்கிங் வீடியோவில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் காட்சிகளும், அவர்களுக்கு வெற்றிமாறன் சொல்லிக்கொடுப்பதும், நடித்துக்காண்பிப்பதுமான க்ளிப்பிங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக சூரியை இந்தப் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.
ட்ரெய்லரின் ஒரு காட்சியில் துப்பாக்கியோடு வீட்டின் ஓடு மேல் அவர் டைவ் அடிக்கும் காட்சி அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. அந்த சீனை அவர் எப்படி நடித்தார் என்பது குறித்த க்ளிப்பிங்குகள் இந்த மேக்கிங் வீடியோவில் இருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் சூரிக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி இந்தப் படம் சூரிக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
