இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப்போகிறார் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கூட்டணி இறுதியில் உடைந்தது. ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.
விக்னேஷ் சிவன் சொன்ன பைனல் ஸ்கிரிப்ட் அஜித்துக்கு திருப்தி அளிக்காததால், அவரை அப்படத்தில் இருந்து நீக்கிய லைகா நிறுவனம் அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது. தற்போது அவர் ஏகே 62 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை படுஜோராக செய்து வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பும் இன்னும் ஓரிரு நாளில் ரிலீஸாக உள்ளது. ஷூட்டிங்கையும் விரைவில் தொடங்க உள்ளார்களாம்.
இந்நிலையில், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அறிந்த விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் படத்திற்காக தான் எழுதிய பாடல் வரிகளை பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அப்படத்தில் இடம்பெறும் கண்ணான கண்ணே என்கிற பாடலில் ‘கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும்’ என ஒரு லைன் வரும்.
அந்த லைன் போலவே தன்னுடைய வாழ்க்கையில் நடப்பதை தற்போது சுட்டிக்காட்டி உள்ளார். கிடைச்ச ஏகே62 பட வாய்ப்பு நழுவி போனாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிராப் செய்யப்பட்ட எல்.ஐ.சி. என்கிற படத்தை தற்போது இயக்க தயாராகி வருவதையும் அந்த பாடல் வரிகள் மூலம் சூசகமாக சொல்லி உள்ளார் விக்கி. விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.