2016 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கியிருந்த இந்தப்படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் தயாரித்து இசையமைத்திருந்தார் விஜய் ஆண்டனி. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இசை அமைப்பாளராக பல்வேறு அதிரடியான வெற்றி பெற்ற பாடல் ஆல்பங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த இவர் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருந்த பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தார் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்’ படம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடந்தது.
அப்போது சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில், நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகம் உட்பட சில இடங்களில் கடும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட முழுவதும் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அண்மையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. இதில் படத்தின் முதல் 3.45 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசப்பட்டது.
மேலும், ட்ரைலரை ட்விட்டரில் பகிர்ந்த படக்குழு “பணம் உலகத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று குறிப்பிட்டு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.