தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய் . சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்டிருப்பது இவர்தான் . தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவரது 68-வது திரைப்படத்திற்கான அறிவிப்பும் கடந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது .
கடந்த சில வருடங்களுக்கு முன்பே தன்னுடைய ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார் தளபதி விஜய் . இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் . சமீபத்தில் கூட 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது .
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மக்கள் இயக்கம் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு வருகின்ற மே மாதம் 28ஆம் தேதி மதிய உணவு வழங்க திட்டமிட்டு இருக்கிறது . இந்தத் திட்டமானது தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற பெயரில் வருகின்ற 28ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து நகரம் மற்றும் ஒன்றியம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது . உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு வழங்க தளபதி விஜய் உத்தரவிட்டிருக்கிறார் . இந்தத் திட்டத்தை தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் செயல்படுத்த அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் .
இது தொடர்பான அறிக்கையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று வெளியிட்டு இருக்கிறார் . மேலும் அந்த அறிக்கையில் பசியால் வாடும் மக்களுக்கு பசியை போக்கவும் பசியினை போக்கும் விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . விஜய் எதிர்கால அரசியல் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே இதுபோன்று செயல்படுவதாகவும் சிலர் இதற்கு விமர்சனம் தெரிவித்துள்ளனர் .
சமீபத்திய அவரது நடவடிக்கைகளும் அரசியலை குறி வைத்தே இருந்து வருகிறது . சர்க்கார் திரைப்படத்தின் மூலம் அரசியல் பேசினார் மேலும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் தூறும் அம்பேத்கர் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செய்தனர் . பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்து இருக்கிறது விஜய் மக்கள் இயக்கம் . தற்போது உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது . இவற்றையெல்லாம் அரசியலாகவே பார்த்தாலும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மக்கள் பாராட்டி வருகின்றனர் .
