நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஃபார்சி வெப் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்லாமல் மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கர், அனுராக் காஷ்யப் இயக்கும் படம் என இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல் தமிழ் மொழியிலும் அடுத்தடுத்த படங்களில் வேகமாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் கமிட்டாகினார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவிருந்த இந்தப் படத்தில் சந்தானமும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த அறிவிப்புடன் புகைப்படமும் வெளியானது. இந்த நிலையில் அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த நேரத்தில் படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்க முடியாத நிலையில், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் சூட்டிங் குறிப்பிட்ட காலத்தில் துவங்கவுள்ளதாகவும் விஜய் சேதுபதியின் ரோலில் சுந்தர் சி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் அடுத்தடுத்து அரண்மனை படத்தின் பாகங்களாக 3 படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து தற்போது அடுத்ததாக 4வது பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 பாகங்களிலும் சுந்தர் சியும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தார். இதனிடையே விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடித்ததால், சுந்தர் சி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.