விக்ரம் நடிப்பில் கடந்தாண்டு பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார் விக்ரம். இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரமின் 61 வது படமாக இந்தப்படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் கே.ஜி.எப் பற்றிய உண்மையான வரலாற்றை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி வருகிறது.
இதனிடையில் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக ரிலீசாகமல் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை தற்போது வெளியீடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக விக்ரம் நடித்துள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் எல்லாம் பல வருடங்களுக்கு முன்பாகவே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தது.
இந்நிலையில் இந்தப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு தற்போது ரிலீஸ் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளில் துருவ நட்சத்திரம் படத்தின் ஸ்டைலிஷான போஸ்டர் இணையத்தில் படுவேகமாக வைரலானது. போஸ்டரில் சாப்டர் 1 – யுத்த காண்டம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், புதிய தகவலாக துருவ நட்சத்திரம் படம் ஜூலை 14-ம் தேதி வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்த தேதியில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, விநாயகம், வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
