மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படத்தில், கதாநாயகனாக நடிகர் கதிர் நடித்திருந்தார். நாயகியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். மேலும் கலையரசன், விஜி சந்திரசேகர், வேல ராம மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்த படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் விக்ரம் சுகுமாரன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தை திரைப்படமாக எடுக்க விக்ரம் சுகுமாரன் திட்டமிட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சியான் விக்ரம் பரிசீலனை செய்யப்பட்டு இருப்பதாகவும் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரிலீசுக்கு பின் அவர் விக்ரமை நேரில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ புத்தகத்திற்கு 2003 ஆம் ஆண்டு சாகித்திய விருது கிடைத்தது. மதுரை அருகே வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராம மக்களின் போராட்டம் தான் இந்த நாவலின் கதை என்பதும் மண் சார்ந்த மக்களின் வலியோடு சொன்ன படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.