அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம் என்று தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.
ஆனால் அதற்கு பிறகு வெளியான அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை அவருக்கு தர மறுத்தது. இருப்பினும் தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்த அவருக்கு 2015ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் உடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தடையறத் தாக்க, குற்றம் 23, தடம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை அருண் விஜய் பெற்றார்.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய், நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்தார்.


அச்சம் என்பது இல்லையே என பெயரிடப்பட்ட இந்த படம், பிறகு மிஷன் சாப்டர் ஒன் ஆக மாறியது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷா சஜயனும் நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், ‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் பணிகளை நிறைவு செய்த அருண் விஜய், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். அடுத்ததாக வணங்கான் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கு, திருவண்ணாமலை வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய் அரசியல் முன்னெடுப்பு குறித்து பேசிய அருண் விஜய், விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அவர் அறிவிக்கட்டும்; சந்தோஷமான விஷயம் தான். அவர் வரும்போது நாம் வரவேற்போம் என்று தெரிவித்தார்.