தமிழ் திரையுலகில் படு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் முன்னணி நடிகர் விஜய், தனது 66 ஆவது படமான வம்சி பைடிப்பள்ளி இயக்கி, தில் ராஜு தயாரிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. மேலும் வருகிற அக்டோபர் 27ஆம் தேதியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு தனது 67 வது படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு வந்திருக்கும் முதல் அப்டேட்.
அடுத்ததாக, ‘தளபதி 67’ என எல்லோராலும் அழைக்கப்படும் விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு வருகிற அக்டோபர் 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்த படத்திற்கான இறுதி ஸ்கிரிப்ட் வேலை முடிந்திருக்கிறது. அதில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக எழுதிய ஸ்கிரிப்ட்டை மறுபரிசீலனை செய்து இரண்டு மிகப்பெரிய மாற்றங்களை லோகேஷ் கனகராஜ் செய்திருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது.
லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ‘விக்ரம்’ திரைப்படத்தில் வேலை பார்த்த திரைப்பட கலைஞர்கள் அனைவரும் இந்த படத்திலும் தக்கவைக்கப்பட்டு இருக்கின்றனர் எனவும் தெரிய வந்திருக்கிறது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இதற்கு முன்னர் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது என அனைவரும் அறிவோம். அதற்கு அடுத்ததாக, லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படமும் வசூலில் சாதனை படைத்தது. இதனால் லோகேஷ் கனகராஜ் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது மீண்டும் விஜய்-லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போது இருந்தே ஆர்வங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.