தல அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமானது நாளை திரைக்கு வர இருக்கிறது. நாளை காலை 4:00 மணி முதல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. இதே நாளில் தளபதியின் வாரிசு படமும் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் ஹீரோக்களை கொண்டாடி வருகின்றனர்.
தல படம் என்றாலே ரசிகர்கள் மாஸ் காட்டுவது வழக்கம். அதுவும் தளபதி படத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வரும்போது ரசிகர்களின் கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும் . அதிக உயரங்களில் கட்டவுட் வைப்பது பால் அபிஷேகம் செய்வது என பிரம்மாண்டமாக தங்கள் தலைவரை கொண்டாடுவார்கள்.
துணிவு படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது என்றே கூறலாம். யூட்யூபில் 60 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி நேரடியாக போட்டியிடுவதால் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் இரட்டிப்பாகி உள்ளது. படம் வெளியாகும் திரையரங்குகளில் கட்டவுட்டுகள் பேனர்கள் என தல ரசிகர்கள் தாறுமாறு செய்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே பாண்டிச்சேரிஅஜித் ரசிகர்கள் அவருக்கு 55 அடி உயரத்தில் கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் ரசிகர் ஒருவர் அவரது 30 அடி கட்அவுட்டிற்கு கிரேன் மூலம் முதுகில் அலகு குத்தி மாலை அணிவித்தது அஜித் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியையும் மக்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பாபு தியேட்டர் இல் தான் அஜித்தின் 30 அடி உயர கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் காஞ்சிபுரத்தை அடுத்த நெமிலி பகுதியை சார்ந்த அஜித் ரசிகர் கிரேன் மூலம் தனது முதுகில் அலகு குத்தி தல அஜித்தின் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து அஜித் மீதான தனது பக்தியை காட்டினார்.
அஜித் எவ்வளவு தான் தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே அவரது ரசிகர்கள் தன்னிச்சையாகவே அவரை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் இதே போன்ற பிரம்மாண்டமான வரவேற்பை அஜித்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவது நல்ல ஒரு விஷயம் தான் என்றாலும் ரசிகர்கள் தங்களது பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.