இந்த ஆண்டு கோலிவுட்டை கலக்கும் வகையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் திரையரங்குகள் பழைய படங்களை மீண்டும் வெளியீட்டு அதிக லாபத்தைப் பார்த்து வருகிறார்கள். மறுபக்கம் மலையாள சினிமா வரிசைகட்டி அடுத்தடுத்து சிறப்பான படங்கள் கொடுக்கும் வேளையில் தமிழ் சினிமா தத்தளிப்பாதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
வருகின்ற ஜூன் மாதம் முதல் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் பெரிய படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகவுள்ளன. அதில் ஒரு சில படங்கள் மோதுகின்றன. வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வரும் பெரிய படங்கள் இரண்டு மோதுவது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அஜித்குமாரின் விடாமுயற்சி படமும் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் தான் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒன்றரை ஆண்டாகவே ஷூட்டிங்கில் இருக்கிறது. இன்னுமும் இந்த இரண்டுப் படங்களுமே முடிக்கப்படவில்லை. தீபாவளிக்கும் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் என செய்திகள் வந்துள்ளன.
அக்டோபர் 30 அல்லது 31ஆம் தேதி, அதவாது தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னர் வெளியிட்டு நல்ல வசூல் பெற இரு படங்களும் வருகின்றன. அஜித் மற்றும் சூர்யாவின் இந்த படங்கள் எப்போதோ வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இன்னும் பணிகள் நிறைவுப் பெறாமல் உள்ளன.
அஜித் – மகிழ் திருமேனி காம்போவில் உருவாகி வரும் விடாமுயற்சி இடையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. லைகா நிறுவனம் தற்போது அதைச் சரி செய்து படப்பிடிப்பை தொடர்ந்துள்ளது. 60% ஷூட்டிங் நிறைவுப் பெற்றுவிட்ட நிலையில் பாக்கியுள்ள படப்பிடிப்பு 2 – 3 மாதங்களில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அப்டேட்களும் ஒவ்வொன்றாக வரும்.
மறுபக்கம் சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துக் கொண்டுள்ளார். வரலாற்று கதையாக அமையும் கங்குவா மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஷூட்டிங் 80% முடிந்த நிலையில் படக்குழு வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. விடாமுயற்சி படத்தை விட இப்படம் வேகமாக தயாராகும்.
அஜித்தின் முன்னாள் விருப்பமான இயக்குனர் சிவா அவருக்கு எதிராக படத்தைக் கொண்டு வருவது மோதலை இன்னும் சூடாக்குகிறது. இந்த முறை தீபாவளி பண்டிகை கோலிவுட் மற்றும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.