இந்த ஆண்டு இதுவரை வெளியாகிய படங்களில் மிகச் சிறப்பாக அனைவரது கவனத்தையும் மலையாளப் படங்கள் ஈர்க்கின்றன. இவ்வாண்டு வந்துள்ளது மலையாளப் படங்களைப் பார்த்து வியந்த பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் கூட பலமாக பாராட்டியுள்ளார்.
மறுபக்கம் சமூக வலைத்தளத்தில் மக்கள் சிறப்பான மலையாளப் படங்களை காட்டி, சமீப காலமாக இதுபோல தமிழில் நல்ல படங்கள் இல்லை என கோலிவுட்டை கேலி செய்தனர். மலையாளத்தில் அடுத்தடுத்து தரமான படங்கள் வரும் வேளையில் இங்கு தமிழ்நாட்டில் லாபத்திற்காக தியேட்டர்கள் பழையப் படங்களை ரீ – ரிலீஸ் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
மலையாள சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகிய ஆட்டம், பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ் ஆகியவை தரமான படங்கள். இதில் பொங்கலுக்கு வெளியான ஆட்டம் படம் மட்டுமே பெரிய அளவில் ஓடவில்லை, ஆனால் விமர்சன ரீதியாக மிகச் சிறந்த படமாக அமைந்துள்ளது. மற்ற மூன்றும் நல்ல லாபம் பெற்றுள்ள படங்கள்.
கடந்த மாதம் முதல் வாரத்தில் வெளியான பிரேமலு எனும் காதல் கதைத் திரைப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கிரிஷ் எனும் இயக்குனர் இயக்கத்தில் மாத்யூ தாமஸ், மமித்தா பைஜூ, ஷியாம் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபீல் குட் திரைப்படம் இது. ஒரு மாதத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் தாண்டி இன்று புதிய சாதனை படைத்துள்ளது.
மலையாள சினிமா வரலாற்றில் இந்தச் சாதனையை நிகழ்த்தும் ஐந்தாவது படம் இது ஆகும். முதல் நான்கு இடங்களில் புலிமுருகன், லூசிபர், 2018, மஞ்சுமேல் பாய்ஸ் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகி 100 கோடி வசூல் ஈட்டிய மற்றொரு மலையாளப் படம் மஞ்சுமேல் பாய்ஸ்.
குணா படத்தின் கண்மணி பாடலை வைத்து தயார் செய்துள்ள மஞ்சுமேல் பாய்ஸ் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக லாபம் கொடுத்துள்ள மலையாளப் படமாக முன்னேறியுள்ளது. இப்படம் மொத்தமாக 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. அடுத்து கோட் லைப் எனும் பெரிய மலையாள திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அதுவும் இதே போலச் சாதனை படைக்கும் என பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது.