வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக, லியோ படத்தில் நடித்தார். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், தனது முந்தைய திரைப்படமான விக்ரமில், எல் சி யு என்னும் கான்செப்ட் அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் சில லைன்களை விக்ரமில் இணைத்து அசர வைத்தார்.
அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில், சூர்யா அறிமுகமாவதும், அங்கிருந்து கமல்ஹாசன், கார்த்தி, பகத் பாசில் கதாபாத்திரங்களை விவரிப்பதும் தமிழ் சினிமாவுக்கு புதிய தாக்கத்தை கொடுத்தது. இதனை ரசித்த ரசிகர்கள், நிச்சயம் லியோ படத்திலும் இது இருக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். இது ஒரு பக்கம் இருக்க, லோகேஷ் கனகராஜும் அதன் கான்செப்ட்டை தொடர்ந்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் லியோவின் வரவை பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனுக்கு மிக கனமான கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுத்திருக்கிறாராம். இருவரும் ஆக்ஷனில் மிரட்ட காத்திருக்கிறார்களாம்.
தாஸ் சகோதரராக இருவரும் படத்தில் களமிறங்க, அவர்களது குழுவில்தான் லியோவாக விஜய் இருப்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர். படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் விஜய் வருகிறார்.
காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் நீண்ட முடியுடனும், சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் வேறொரு கெட்டப்பிலும் விஜய் காட்சியளித்தார். இதனால் பாட்ஷா பாணியில் இரண்டு விதமான விதிகளை நாம் பார்க்கலாம் என பலரும் கூறுகின்றனர். சமீபத்தில், செய்தியாளர்களும் பேசிய லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், வரும் வாரத்தில் இருந்து லியோ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவித்தார்.
ஆனால் சொன்னபடி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் கடும் அதிருப்தியில் இருந்தனர் ரசிகர்கள். லலித்குமார் என்ன ஆச்சு என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், தற்போது வாய் திறந்து உள்ள தயாரிப்பாளர், அடுத்த நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு மொழியிலும் லியோ போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்தார்.
அந்த வகையில் இன்று, லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்து நாட்களில் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் போஸ்டர் வெளியாக இருக்கிறது. வரும் நாட்களில் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.