லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் ஷூட்டிங் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கும் படம் லியோ. இந்தப் படத்திற்கு உலகளவில் பயங்கர எதிர்பார்ப்புகள். இன்னும் சரியாக ஒரு மாதத்தில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
அதற்கான புரொமோஷன் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு மொழிகளுக்கான போஸ்டர்களை வெளியிட துவங்கியது. இதுவரை தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வந்துள்ளது. இன்று ஹிந்திக்கு ஓர் போஸ்டர் வரவிருந்தது. ஆனால் துக்க செய்தி ஒன்றினால் தற்போது அது அடுத்து நாளுக்கு தள்ளிப் போய் உள்ளது.
கோலிவுட் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த துக்கதை அனுசரிக்கும் விதமாக இன்று எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என முடிவு செய்து தளபதி விஜய்யின் சம்மதத்துடன் அப்டேட்டை ஒத்தி வைத்துள்ளனர்.
லியோ படக்குழு எடுத்த ஓர் நல்ல முடிவு இது. 16 வயதே ஆகும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தககவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவர் 6 மாதங்களாக அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். வாழ்கையின் எதார்த்தத்தை அழகாக பேசும் விஜய் ஆண்டனியின் மகளுக்கு இது நடந்திருப்பது சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
எதற்குமே தற்கொலை முடிவல்ல. நம்மை நம்பி இருக்கும் நம்மேல் பாசம் வைத்திருக்கும் நபர்களை அது பின்னர் பாதிக்கும். நா.முத்துகுமார் எழுதிய ஒரு நாள் பாடலில், “ ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது. மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது ” எனும் வரிகளை நன்கு உணர்ந்தால் வாழ்க்கை சுலபமே. மிகவும் மன அழுத்தம் இருந்தால் 14416 எனும் நம்பரை அழைத்துப் பேசுங்கள்.
இன்று தள்ளிப் போன லியோ போஸ்டர் நாளை வெளியாகும். இன்னும் 2 போஸ்டர்கள் வரவிருக்கிறது. அதன் பின் இரண்டாவது பாடல், டீஸர், 30ஆம் தேதி இசை வெளியீட்டு விழா என அடுத்தடுத்து ஒரு மாதத்திற்கு கொண்டாட்டம் தான்.