ராக்கி, சானிக்காயிதம் என அடுத்தடுத்து ராவான படங்களை கொடுத்த இயக்குனர் அருண் மாதீஸ்வரன் தற்போது தன் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ராக்கி திரைப்படம் வெளியான போதே, இந்த இயக்குனர் அடுத்ததாக தனுஷுடன் கைகோர்ப்பதாக செய்திகள் கசிந்தன. இன்று அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இன்று ( ஜூலை 2ஆம் தேதி ) மாலை 6 மணிக்கு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர். ஜி.வி.பிரகாஷின் மிராலட்டான பின்னணி இசையில் வெளியான வீடியோவில், நடிகர் தனுஷ் மோட்டார் பைக்கில் பறந்து வருகிறார். கேப்டன் மில்லர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம், 1930 – 40களில் இருந்த மெட்ராஸ் பிரெசிடன்சியில் நடக்கிறது. இது குறித்து இயக்குனர் அருண் பேசியுள்ளார்.
“ 2018ஆம் ஆண்டே இந்தக் கதையை நான் எழுதிவிட்டேன். மேலும் நடிகர் தனுஷிடம் இதைக் காண்பித்தேன். அவரும் கதையை வாசித்தார். ஆனால் படம் எடுப்பது குறித்து எந்த ஒரு முடிவும் நாங்கள் அன்று எடுக்கவில்லை. பின்னர் 2019க்குப் பின்னர் மீண்டும் இதை தொடங்கியுள்ளோம். ” என்றார். மேலும், தன்னுடைய முதல் 2 படங்களைப் பில மிகவும் ராவாக இந்தப் படம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
“ என்னுடைய முதல் 2 படங்கள் மிகவும் தீவிரமான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள். கேப்டன் மில்லர், அதுப் போல் இல்லாமல் முழுக்க முழுக்க கதாநாயகனின் வாழ்க்கையைப் பற்றியக் கதையாக இருக்கும். யு/ஏ சான்றிதழ் பெறவிருக்கும் இந்த படத்தின் மூலம் மெயின்ஸ்டிரீம் பார்வையாளர்களை இழுக்க விரும்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கும், அதோடு மிக முக்கியமாக இரண்டாம் பாதிக்கு போர் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. ” என சில முக்கிய செய்திகளை பகிர்ந்துள்ளார் இயக்குனர்.
மூன்று வேடங்களில் தனுஷ் :
தனுஷின் கதாப்பாத்திரம் குறித்து கேட்ட கேள்விக்கு இயக்குனர் கூறியதாவது, “ நான் கதையை எழுதத் தொடங்கும் போது எந்த ஹீரோவும் என் மனதில் இல்லை. ஆனால் பாதியில் இருக்கும் போது தனுஷ் தன இதற்கு சரியான தீர்வாக இருப்பார் என நினைத்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். கதை 15 ஆண்டுகளைச் சுற்றி நடக்கிறது. படத்தில் தனுஷுக்கு மேலும் 2 கதாப்பாத்திரங்கள் உள்ளன. ஆகையால் மொத்தம் 3 வெவ்வேறு காலக் கட்டத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ”
இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். ராக்கி & ஜகமே தந்திரம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்தை தன் கேமராவில் பதிவு செய்யவுள்ளார். சார்பட்ட பரம்பரை படத்திற்கு மிக அற்புதமாக செட் போட்ட ராமலிங்கம் இந்த படத்திற்கு கலை இயக்குனராக பணிபுரிகிறார். முதலில் தமிழில் படமாக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் டப்பிங்க் செய்யப்படவுள்ளது. கே.ஜி.எப், புஷ்பா திரைப்படங்களைப் போல பேன் இந்தியா படமாக இது உருவாகிறது.