தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பிரின்ஸ் என்று அழைக்கப்படுகிறார். சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்த டான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், தமிழகத்தில் மட்டும் 85 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையை படைத்தது. இது டாப் நடிகர்களின் வசூலுக்கு சமமாக இருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதனால் அடுத்த தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயன் நம்பர் ஒன் நடிகராக வலம் வருவார் என அவரது ரசிகர்களும் நம்பி வருகின்றனர். டான் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீஸ் ஆக உள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடி கலக்கல் நிறைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதே போன்று சிவகார்த்திகேயன் ரவிக்குமார் கூட்டணியில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 22 ஆவது திரைப்படமின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயனை ரவுடி கும்பல் தாக்குவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏதோ நிழல் சிவகார்த்திகேயனை கயிரால் கட்டி இயக்குவது போலவும், அதனைத் தொடர்ந்து அந்த ரவுடி கும்பலை சிவகார்த்திகேயன் புரட்டி எடுப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது சூப்பர் ஹீரோ திரைப்படம் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹீரோ என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவீரன் எனத் தலைவர் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இந்தப் படத்தை மடோன்னே அஸ்வின் இயக்குகிறார். இவர் நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து மண்டேலா என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த படம் நெட்பிளிக்சில் வெளியாகி பல்வேறு விருதுகளை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் இசை அமைப்பாளராக பரத் ஷங்கர் பணியாற்றுகிறார் மாஸ்டர் விக்ரம் திரைப்படத்தை எடிட்டிங் செய்த பிலோமின் ராஜ் மாவீரன் படத்திலும் பணியாற்றுகிறார்.
மண்டேலா திரைப்படம் சமூக கருத்தும், நகைச்சுவையும் கலந்த திரைப்படமாக இருக்கும்.இதனால் மாவீரன் படமும் அதே கலவையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை மையமாக வைத்து மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கருதப்படுகிறது. தொடர்ந்து வித்தியாசமான இயக்குனர்களுடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்து வருவது அவரது ரசிகர்களுடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதன் மூலம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.