நடிகர் கார்த்தி நடித்து 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி நடித்து 100 கோடி வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை கைதி ஈட்டியது. மாநகரம் படத்தின் மூலம் கவனத்தை பெற்றாலும், கைதிக்கு பிறகு தான் லோகேஷ் கனகராஜ் வெகுஜன மக்களால் கொண்டாடப்பட்டார்.
தற்போது இந்த கைதி திரைப்படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தான் விக்ரம் திரைப்படம் உருவானது. இதனால் லோகேஷ் கனகராஜ் தனது அனைத்து படத்தின் கதையும் ஒன்றிணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று அழைக்கப் போகிறேன் என்று கூறினார்.
கைதி திரைப்படத்தில் ஹீரோயினே கிடையாது. அதில் கார்த்தி முதல் காட்சியில் போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கி வந்து பிரியாணி சாப்பிடும் வகையில் மிரட்டலாக இருந்திருக்கும்.
இந்த நிலையில் கைதி திரைப்படத்தை ஹிந்தியில் போலா என்று ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் தயாரித்து, இயக்கி நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் தபு உள்ளிட்ட இரண்டு ஹீரோயின்கள் வேறு இருக்கிறார்கள். கைதி படத்தில் தான் நாயகியே கிடையாது. அப்போது எதற்கு 2 ஹீரோயின் என்று கேட்ட உடனே தமிழக ரசிகர்களுக்கு தலை சுற்று தொடங்கி விட்டது.
இந்த நிலையில் டீசர் என்ற பெயரில் ஒரு பெரிய காமெடியை பாலிவுட் பட குழு செய்திருக்கிறது. கைதி படத்தில் வெற்றிக்கு காரணமே கார்த்தியின் மாஸ் லுக் தான். ஆனால் அஜய் தேவகன் ஏதோ சாமியார் மடத்திலிருந்து வெளிவரும் நபர் போல் இதில் காட்சியளிக்கிறார். இந்த டீசரில் முதல் காட்சியை அஜய் தேவகன் சிறைச்சாலையில் இருந்து வெளியே வருவது போல் அமைந்திருக்கிறது.
அப்போது பின்னணி குரலில் இவன் பட்டையை எடுத்து நெற்றியில் பூசி கொண்டால் எதிரிகள் சாம்பலாக போகிறார்கள் என்று அர்த்தம் என்று குபீர் வசனமும் இடம் பெற்றுள்ளது.இந்த டீசரில் ஒரு நிமிட காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு நிமிடமே இவ்வளவு நகைச்சுவையாக இருப்பதால் படம் நிச்சயமாக தமிழக ரசிகர்களுக்கு பெரிய கன்டென்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். தமிழிலிருந்து பல படங்களை ஹிந்தியில் சொதப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது பாலிவுட் சினிமா கைதி என்ற பர்னிச்சரை உடைத்து உள்ளது.