நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாத்த திரைப்படம் தோல்வியை அடைந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு எந்த படத்திலும் ரிலீஸ் செய்யவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்தின் போட்டியாளராக கருதப்பட்ட அனைத்து நடிகர்களின் படமும் வசூலில் பெரிய சாதனை படைத்தது.
குறிப்பாக நடிகர் கமலின் விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதனால் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். இதனால் படத்தை ஓட வைக்க மோகன்லால், சுனில் போன்ற நடிகர்களை ஜெய்லர் படத்தில் பட குழு நடிக்க வைத்திருக்கிறது.
இதேபோன்று பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து ஜெய்லர் படம் மூலம் பதிலடி கொடுக்க வேண்டிய பொறுப்பு இயக்குனர் நெல்சனுக்கு இருக்கிறது. இதனால் ஜெய்லர் படத்தை மிகவும் கவனத்துடன் நெல்சன் எடுத்து வருகிறார். ஜெய்லர் திரைப்படம் கோடை கால விடுமுறையை மையமாக வைத்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது.
ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதனால் ஜெய்லர் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரிக்கும் லைக்காவுக்கும் ரஜினிக்கும் நல்ல தொடர்பு இருப்பதால் இரண்டு படத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ரஜினி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கோடை விடுமுறை ரேசிலிருந்து ஜெயிலர் விலகி உள்ளது. இதன் காரணமாக தங்களது அபிமான நடிகரை வெள்ளித்திரையில் பார்க்க இன்னும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.