95வது விருது நிகழ்ச்சி இன்று காலை துவங்கி பரபரப்பாக நடைபெற்றது. பல்வேறு சிறப்பான திரைப்படங்கள் மற்றும் எதிர்பார்த்த படங்கள் விருதுகளை தட்டிச் சென்றது. ‘ எவ்ரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ’ எனும் சீன திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியது.
அது தவிர தி வேல், ஆல் குவைட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃப்ரண்ட், அவதார் 2, வுமன் டாக்கிங் ஆகிய வெளிநாட்டுப் படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை பெற்றது. இந்திய சினிமாவில் இருந்து முன்னேறிய 2 படங்கள் 2 ஆஸ்கார்களை வென்று பெருமை சேர்த்துள்ளது. சிறந்த ஆவணக் குறும்படம் விருதை ‘ தி எலிபேன்ட் விஸ்ப்பர்ஸ் ’ மற்றும் சிறந்த பாடல் விருதை ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தைச் சேர்ந்த ‘ நாட்டு நாட்டு ’ பாடல் வென்றன.
4 விருதுகள் வென்ற ஆல் குவைட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃப்ரண்ட்
1929ல் எரிக் மாரியா ரெமார்க் எழுதிய நாவலை தழுவி உருவாக்கப்பட்ட ஜெர்மன் திரைப்படம் ‘ ஆல் குவைட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃப்ரண்ட் ’. இந்த எழுத்தாளரின் நேரடி அனுபவமே இந்த நாவல் ! முதலாம் உலகப் போரின் போது ரெமார்க் மற்றும் அவரது இரு நண்பர்கள் நாட்டுப் பற்றால் அவர்களது ஜெர்மனி நாட்டின் ஆர்மியில் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் கேள்விப்பட்ட கற்பனை போர்க்காட்சிகள் இல்லாமல் ரத்தமும் சதையும் கிடக்கும் போர்க்களத்தில் மூவரும் பிழைப்பதே இப்படம்.
இந்தத் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது. இந்த நான்கு விருதுகளை இந்தப் படம் தவிர வேறு எந்தப் படம் பெற்றிந்தாலும் அது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து இருக்கும்.
விக்ரம் திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இப்படத்தைப் பற்றி கமல் ஹாசன் பெருமையாகப் பேசினார். அவர் கூறியதாவது, “ சமீபத்தில் நெட்ப்பிளிக்கஸில் ஆல் குவைட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃப்ரண்ட் எனும் திரைப்படத்தைப் பார்த்தேன். அந்த 20 வயது இளைஞர்களின் நடிப்பைப் பார்த்து நான் வியந்தேன். அவர்களைப் பார்க்கும் போது போது இதையெல்லாம் நான் என் இளம் வயதில் செய்யவில்லையே என்ற பதட்டத்தை ஏற்படுத்தியது. ” என்றார். சினிமாவில் அனைத்துப் பக்கங்களையும் படித்துவிட்ட கமல் ஹாசனே இப்படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார். இன்னும் பார்க்கவில்லை எனில் விரைந்து பாருங்கள் !