நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய நிலையில் ரசிகர்களிடையே இது கலவையான விமர்சனத்தை பெற்றது. முதல் நாளில் மட்டும் படம் 13 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
ஆனால் அதன் பிறகு விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆனதால் மக்களின் கவனம் அதன் பக்கம் திரும்பியது. இதனால் பத்து தல திரைப்படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் இது தோல்வி படமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம் பத்து தல திரைப்படம் தங்களுக்கு வெற்றி படமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளது.
சிம்பு படத்திலேயே அதிக வருமானத்தை கொடுத்த திரைப்படம் என்று பெருமையை பத்து தல பெற்று இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடி சாட்டிலைட் என தங்களுக்கு லாபம் கிடைத்து விட்டதாகவும் திரையரங்குகளும் படம் நன்றாக ஓடியதாகவும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பத்து தல திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வரவேற்பையும் கொடுத்த ரசிகர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் தாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய அடுத்த படைப்புகளுக்கும் இது வெற்றியை தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கையில், விடுதலை திரைப்படம் வசூலில் முதலிடத்தில் பிடித்திருப்பதாகவும் 10 தல எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 10 தல திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தில் 20 முதல் 25 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருக்கும் என்றும் இது வெந்து தணிந்தது காடு படத்தின் வசூலை விட குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 10 தலை திரைப்படம் தனியாக வந்திருந்தால் நல்ல வசூலை பெற்றிருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.