தமிழ் சினிமாவின் குறுகிய காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்தவர் பா ரஞ்சித். சூப்பர் ஸ்டாரை வைத்து காலா, கபாலி போன்ற படங்களை பா ரஞ்சித் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அவர் எடுத்த சார்பட்டா பரம்பரை ஓடிடியில் சக்கை போடு போட்டது.
எப்போதும் சமூக அரசியல் கருத்துக்களை படத்தில் ஆணித்தனமாக எடுத்துச் சொல்வதில் பா ரஞ்சித் வல்லவர். இந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், மே மாதம் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் பா.ரஞ்சித் கூறியிருந்தார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதற்கு என தனியாக ஆறு மாதம் தேவைப்படும் என்றும் படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் வேற லெவலில் உருவாகி வருவதாகவும், இந்த படத்தை வெளிநாட்டவர்கள் கூட தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்திருப்பதால் ஆஸ்கரில் விருது கூட தங்கலான் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் சி இ ஓ தெரிவித்துள்ளார்.
இதனால் தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப கூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. கே ஜி எஃப் தங்க சுரங்கத்தில் நடக்கும் அநியாயங்களை இந்த படம் பேசுவது போல் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.