நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கிய மனோபாலா 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பின்னர் சொந்தமாக 23 படங்களை மனோபாலா இயக்கி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஊர்காவலன், மல்லுவேட்டி மைனர்,விஜயகாந்த் வைத்து என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், சத்யராஜை வைத்து பிள்ளை நிலா, நடிகர் கார்த்திக்கை வைத்து ஆகாய கங்கை ,நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பாரம்பரியம் ஆகிய வெற்றி படங்களை மனோபாலா இயக்கியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து நடிகராக வலம் வந்த மனோபாலா காலத்தால் அழியாத பல்வேறு காமெடிகளில் நடித்திருக்கிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற விவேக் காமெடி மூலம் பட்டித் தொட்டி எல்லாம் மனோபாலா பிரபலமானார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த மனோபாலா அரண்மனை சந்திரமுகி போன்ற படங்களில் நடித்து தற்போதுள்ள தலைமுறை நிற்கும் பரிச்சயமாக திகழ்ந்தார்.
கடைசியாக கோஷ்டி,கொன்றால் பாவம், வால்டர் வீரய்யா போன்ற படங்களில் மனோபாலா நடித்திருந்தார். மனோபாலாவுக்கு கடந்த சில மாதத்திற்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது அவருக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோபாலா இன்று காலமானார்.
நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் நடைபெறும் முக்கிய விஷயங்கள் விவகாரங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் மனோபாலா கலைஞர்கள் யாரேனும் பிரச்சனை என்றால் முதல் ஆளாக அவர்களுக்கு ஆதரவாக நிற்பார். மனோபாலா எப்போதும் தமிழக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்.