பெரும் சர்ச்சைக்கு பெயர் போன கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் தமிழகத்தில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தையும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயம் மீதும் தவறாக சித்தரிக்கும் வகையில் கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது..
முதலில் இந்த திரைப்படத்தில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் பெண்கள் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் மதம் மாற்றி இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கான போதிய ஆதாரம் தங்களிடம் இல்லை என படக்குழு ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து 32,000 என்ற எண்ணிக்கை 3 பெண்களாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கேரளா ஸ்டோரிஸ் திரைப்படத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த ஐந்தாம் தேதி கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் சென்னையில் ஒரு சில அரங்குகளில் மட்டும்தான் படம் ரிலீஸ் ஆனது.
இதனை கண்டித்து நாம் தமிழர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் டிஎன்டிஜே உள்ளிட்ட அமைப்பினர் திரையரங்குகள் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படத்தை திரையிட்டால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கேரளா ஸ்டோரிஸ் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என்ற காரணத்தினாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாலும் தமிழகத்தில் இந்த படத்தை இன்று முதல் நிறுத்தி விடுவதாக தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் இன்று முதல் எந்த திரையரங்கிலும் வெளியிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.