தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. தமிழ் சினிமாவில் எப்போதும் அதிரடி, காதல், பாட்டு என வந்து கொண்டிருந்த சினிமாவுக்கு இடையில் புதிய வகை சினிமாவுக்கு அடித்தளம் போட்டவர் என்றால் அது தியாகராஜன் குமாரா ராஜா தான்.
இந்த நிலையில் அவர் அமேசான் வீடியோ பிரைம் தளத்தில் வெளியான மாடர்ன் லவ்ஸ் என்ற சிறுகதை தொகுப்பை இயக்கி இருக்கிறார். இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய குமாரராஜா, இளையராஜா உடன் நான் பணியாற்ற ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. மிஷ்கின் சார்தான் அந்த தயக்கத்தை உடைத்தார்.
என்னிடம் நீ கண்டிப்பாக இளையராஜா உடன் பணியாற்ற வேண்டும். அது உனக்கு வாழ்நாள் அனுபவத்தை கொடுக்கும் என்று கூறினார். இளையராஜாவுடன் பணி செய்தால் ஒன்று உங்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விடுவீர்கள், இல்லையென்றால் உங்கள் நட்பு மிகவும் பிணைப்பாக மாறிவிடும் என்று அவர் கூறினார்.
சரி என்று நானும் இளையராஜாவுடன் பணியாற்ற சென்றேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட இளையராஜா சாருடன் ஒரு மாதம் பணியாற்றினேன். அதற்குப் பிறகு இளையராஜா சார் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. நாங்கள் பணியாற்றிய போது ஒரு வாரத்தில் அவர் ஹைதராபாத் சென்றிருந்தார்.
அப்போது நான் அவருக்கு மெசேஜ் செய்தேன். சார் உங்களிடம் பேசாமல் இருக்க முடியவில்லை என்று கூறினேன். அதற்கு அவரும் ஆம் எனக்கும் அப்படித்தான் இருக்கிறது விரைவில் சந்திப்போம் என்று கூறினார்.அவர் தன்னை ஒரு பெரிய ஜாம்பவான் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள மாட்டார். என்னிடம் மிகவும் சாதாரணமாக பேச சொல்லி வற்புறுத்தினார்.
நான் அப்போது கூறினேன் சார் உங்களிடம் பல இயக்குனர்கள் பணிபுரிய காத்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தயக்கம் இருக்கிறது என்று கூறினேன். அதற்கு அங்குதான் எனக்கும் புரியவில்லை ஏன் தயக்கப்படுகிறார்கள் வர சொல்லுங்கள் வந்து என்னை சந்தித்து பணியாற்ற சொல்லுங்கள் என இளையராஜா கூறினார்.
இசையில் அவர் மாமேதை என்பதை நிரூபித்து விட்டார். ஒவ்வொரு படைப்பையும் அவர் மெருகேற்றுவார். தனக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும் கூட இசைக்காக அவர் பணியாற்றியதாக தன்னிடம் கூறி இருக்கிறார் என இயக்குனர் தியாகராஜன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.