கோலிவுட்டில் இளைய தளபதி விஜய் தான் அண்மையில் பிரம்மாண்ட உயரத்தில் இருக்கிறார். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சில வருடங்களாகவே முக்கியமாக பிகில் இசைவெளியீட்டு விழாவில் இருந்தே அவரது அரசியல் பேச்சுகள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பேச்சுகளோடு அவரது செயல்களும் அதைத் தான் தெரிவிக்கின்றது என பல வல்லுனர்கள், மீடியாக்கள், அசடியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றனர்.
விஜய்யின் கல்வி விழா
கடந்த வாரம் பல கோடிகள் செலவழித்து 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய் அவர்கள் சற்றும் சலிக்காமல் தொடர்ந்து அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்து வந்தவர்களை ஏமாற்றாமல் அனுப்பினார்.
அவரது இந்தச் செயல் பெரிய அளவில் சென்றடைந்தது. பல அரசியல்வாதிகளும் இதனைப் பாராட்டினர். இந்த செயல் அவரது அரசியலுக்கு ஒரு விதையா இல்லையா என்பதைத் தாண்டி இது ஓர் சிறந்த நற்செயல் என்பதனை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது. நிகழ்ச்சியில் வெற்றிமாறனின் அசுரன் பட வசனத்தைக் குறிப்பிட்டு கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.
விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா ?
நடந்த முடிந்த இந்த விழாவில் பலர் விஜய்யின் அரசியல் ஈடுபாட்டைக் குறித்தும் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் பேசினர். அவரும் வந்த மாணவர்களுக்கு தேர்தல், பணப்பட்டுவாடா, ஒட்டின் முக்கியத்துவம் என அரசியல் பற்றியும் சிலவன குறிப்பிட்டார். அதோடு பெரியார், காமராஜர், அம்பேத்கர் பற்றியும் படித்துத் தெரிந்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
சில வட்டாரங்களில் வெங்கட் பிரபுவின் படத்திற்குப் பின் விஜய் 2026 தேர்தலுக்காக முழு நேர அரசியலில் களமிறங்கப் போவதாகவும் சொல்கின்றனர். மேலும் கடந்த ஓர் ஆண்டாகவே தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். அதனால் நிச்சயம் விஜய் ஒரு பெரிய முயற்சியைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் முன்மாதிரி எம்.ஜி.ஆரைப் போல வர எண்ணுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
முதலமைச்சர் விஜய் போஸ்ட்டர்கள்
தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் மிகவும் முத்திப் போய்விட்டது. இப்போதெல்லாம் சிறிய அப்டேட்க்கே பேனர் கட் அவுட் வைக்கத் துவங்கிவிட்டனர். அடுத்து வரவிருக்கும் லியோ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நா ரெடி பாடலுக்கும் ஏற்கனவே பேனர்கள் ரெடி ! நாளை விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்ட்டர்களை நிரைப்பியுள்ளனர். சில தீவிர ரசிகர்கள் சிறப்பாக செய்யும் நோக்கில் எதாவது நகைச்சுவையாக செய்து அந்த போஸ்டர்களை சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மற்றிவிடுவர்.
இம்முறை வருங்கால முதலமைச்சர் விஜய் எனும் போஸ்டர்கள் அதிக தென்பட்டுள்ளன. இது வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால் விஜய்யின் அரசியல் வருகைப் பற்றி பலர் குறிப்பிடுவதால் இந்த முறை இதனை தீவிரமாக செய்கின்றனர். இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் எனச் சொல்லியும் அவரின் மேல் இருக்கும் பற்றால் கண்மூதுத் தனமாகச் செய்து வருகின்றனர்.