கடந்த வாரம் தேமுதிக தலைவர் மற்றும் புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பலனின்றி மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் திரண்டனர்.
அன்று ஷூட்டிங் காரணமாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் தவறிய பிரபலங்கள் தற்போது சென்னை திரும்பியவுடன் சமாதியைப் பார்த்து வணங்கி வருகின்றனர். சூர்யா, கார்த்தி, அருண் விஜய் ஆகியோர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய்காந்த் போல ஓர் நல்ல காரியத்தை இனி செய்வதாக கூறியுள்ளார். “ விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் என்னால் கலந்துக் கொள்ள இயலவில்லை. எல்லோரும் சினிமாவில் ரஜினி, கமல் போல வர வேண்டும் எனத் தான் பெரும்பாலும் நினைப்பார்கள். ஆனால் நான் விஜயகாந்த் போல மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் எனத் தான் நினைத்தேன். ” என்றார் நடிகர் அருண் விஜய்.
மேலும், “ நல்ல மனிதரை தமிழகம் இழந்துள்ளது. இனி நானும் அவரைப் போலவே என் படத்தின் ஷூட்டிங்கில் அனைத்து நபர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்குவேன் என்பதை இன்று அவரது சமாதிக்கு முன்பு தெரிவிக்கிறேன். ” என்றார்.
கேப்டன் விஜயகாந்த் அனைவரும் சமம் என்பதை எப்போதும் பின்பற்றினார். அதனால் தன் ஷூட்டிங்கில் தான் சாப்பிடும் உணவின் தரத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்படுத்தினார். தற்போது தன் முன்மாதிரியான விஜயகாந்த் அவர்களைப் போலவே அருண் விஜய்யும் கேப்டனின் நற்பணியைத் தொடர்வதாகக் கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்த கேப்டனுக்கு நன்றி சொல்லும் விதமாக அவரது பெயரை நடிகர் சங்கத்திற்கு வைக்க வேண்டும் என்பதை அருண் விஜய்யும் விரும்புகிறார். நடிகர் சங்கம் அதனைப் பரிசீலனை செய்வர் எனவும் நம்புகிறார் அருண் விஜய்.