Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாவிடுதலை சூட்டிங்கில் பாட்டி கேட்ட கேள்வி.. ஆடிப்போன நடிகர் சூரி.. செம சிரிப்பு

விடுதலை சூட்டிங்கில் பாட்டி கேட்ட கேள்வி.. ஆடிப்போன நடிகர் சூரி.. செம சிரிப்பு

- Advertisement -

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த பல்வேறு நடிகர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி அறிமுகமாகியுள்ள நிலையில் படப்பிடிப்பின் போது நடந்த காமெடி சம்பவத்தை அவர் மேடையில் நினைவு கூர்ந்தார். இது குறித்து பேசிய அவர் விடுதலை படப்பிடிப்பின் போது மறக்க முடியாத பல சம்பவங்கள் நடைபெற்றது. அதில் தற்போது எனக்கு நினைவுக்கு வருவது ஒன்று தான். நான் படப்பிடிப்பில் பங்கேற்றபோதும் என்னை தேடி ஒரு வயதான பாட்டி தினமும் படத்தளத்திற்கு வந்து கேட்டு இருக்கிறார்.

- Advertisement -

அவர் வரும்போது எல்லாம் நான் ஷூட்டிங் முடித்து முன்பே சென்றிருப்பேன். இல்லையெனில் நான் இருக்கும் தருணத்தில் அந்த பாட்டி வரமாட்டார். சுமார் ஏழு நாட்கள் இப்படியே நடந்தது. பலரும் என்னிடம் ஒரு பாட்டி உங்களை தேடியதாக கூறினார்கள். ஒரு கட்டத்தில் படத்தின் கேமரா மேன் இதுபோன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைப்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -

அந்தப் பாட்டியின் வீடு அங்கு தான் இருக்கிறது. நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்கி விட்டு வா என்று என்னை அனுப்பினார்கள். நானும் அந்தப் பாட்டின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் பழைய சோறு சாப்பிட்டு கொண்டு இருந்தார். படத்தின் துணை இயக்குனர்கள் பாட்டியிடம் சென்று நடிகர் சூரி உங்களை பார்க்க வந்திருப்பதாக கூறினார்கள்.

உடனே அந்த பாட்டி சாப்பாட்டை போட்டுவிட்டு அங்கிருந்து என்னை வந்து பார்த்து,  ஐயா நல்லா இருக்கியா ஐயா!  உங்கள பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்று எனக்கு முத்தமிட்டார். அப்போது ஏன் ஐயா கருத்து போயிட்ட டிவில எல்லாம் சிவப்பா இருப்பியே அப்படி என்று பாட்டி கேட்டார். உடனே நான் அது மேக்அப் மேன் எனக்கு இப்போது கருப்பாக தெரிவதற்காக மேக்கப் போட்டு இருக்கிறார் என்று சொல்லி சமாளித்தேன்.

அதன் பிறகு உங்க அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்பா என்று அந்த பாட்டி கூறினார். இதனால் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு பேசிய பாட்டி உங்கள் அப்பா நடித்த படத்தை நான் மறக்காமல் பார்த்து விடுவேன். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் எல்லாம் என் கணவர் நானும் ஒன்றாக திரையரங்கில் சென்று பார்த்தோம்.
உன்னுடைய தம்பியும் இப்போது நடிக்கிறாராமே. அவரையும் கேட்டதாக சொல்லுப்பா என்று பாட்டி கூறினார்.

அப்போதுதான் எனக்கு தெரிந்தது அவர் என்னை பற்றி பேசவில்லை நடிகர் சூர்யா என்று தவறாக நினைத்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். உடனே பாட்டி நீங்க கேட்கிறது சிவக்குமாருடைய மகன் சூர்யா. நான் வெறும் நடிகர் சூரி என்று கூறினேன். அதற்கு அந்த பாட்டி ஆச்சரியத்தில் அப்போ உங்க அப்பா என்ன பண்றாரு என்று கேட்டதற்கு,  எங்க அப்பா மாடுகளை விற்று வருகிறார் என்று கூறினேன். உடனே அந்த பாட்டி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு விட்டார் என்று சூரி கூறினார்.

Most Popular