தமிழ் சினிமாவில் பல பிரபலமான திரைப்படங்களை எடுத்து அதன் பிறகு நஷ்டம் அடைந்து மருத்துவ உதவிக்கு பணம் இல்லாமல் தெருவுக்கு பல தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல தயாரிப்பாளர்கள் பிறகு தவறான படங்கள் மற்றும் கூடுதல் செலவு போன்ற காரணங்களால் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து தவித்து வருகிறார்கள்.
இதில் சிலர் மீண்டும் உச்சத்துக்கு சென்று இருக்கிறார்கள். தற்போது கலைப்புலி எஸ் தானு, சத்யஜோதி பிலிம்ஸ், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற சில தயாரிப்பாளர்கள் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். பலர் கிடைத்த பணம் போதும் என்று சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்கள்.
இதனால், தற்போது தமிழ் சினிமா கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளுக்கு சென்று விட்டது. இந்த நிலையில் பிதாமகன், என்னம்மா கண்ணு, லவ்லி, ஊட்டி போன்ற பல்வேறு படங்களை எடுத்த தயாரிப்பாளர் வி எஸ் துரை இன்று பரிதாபமான நிலையில் உள்ளார்.
தம் எடுத்த படங்கள் நஷ்டத்தை சந்தித்ததால் அதனை சரிகட்ட தான் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாத்தையும் விற்று தற்போது ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள். தற்போது வி எஸ் துரைக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு இருக்கிறது.
காலில் ஏற்பட்டுள்ள புண் ஆறாததால் அதனை சரி செய்வதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும் அதற்கு தன்னிடம் பணம் இல்லாததால் திரை பிரபலங்கள் உதவி செய்ய வேண்டும் என நேற்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
இதனை அறிந்த நடிகர் சூர்யா உடனடியாக தயாரிப்பாளர் வி எஸ் துறைக்கு 2 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கி இருக்கிறார். பிதாமகன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அந்தஸ்து பெற்றாலும் அதன் தயாரிப்பாளர் தற்போது இருக்கும் நிலையை கண்டு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் பல நடிகர்கள் தற்போது வி எஸ் துரைக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.