தமிழ் சினிமாவில் அனைத்து உச்ச நடிகர்களும் நிகழ்ச்சிக்கு செல்வது நேர்காணல் தருவது இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என தங்களுடைய ரசிகர்களை எப்போதும் கலகலப்பாகவே வைத்திருப்பார்கள். ஆனால் இதில் நடிகர் அஜித் மட்டும் வித்தியாசமானவர்.
சினிமாவை தாண்டி அவரை எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாது. அவருடைய படத்திற்கு என தனியாக இசை வெளியீட்டு விழா கூட நடைபெறாது. நேர்காணல் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் நடிகர் அஜித் ஏன் நேர்காணல் தருவதில்லை என்பது குறித்து நெறியாளர் கோபிநாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,நடிகர் அஜித்தை சந்தித்த போது நான் அவரிடம் நீங்கள் எனக்கு கண்டிப்பாக ஒரு இன்டர்வியூ தர வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர் மிகவும் யோசித்தார். பிறகு நான் அவரை பேசி சமாளித்து இண்டர்வியூக்கு தயார் செய்தோம்.
பிறகு ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்டர்வியூ நடந்தது. அப்போது நடிகர் அஜித் ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து சரியான வார்த்தைகளை தேர்வு செய்து பேசினார். அப்போது நான் கேமராவை ஆப் செய்து விட்டு சார் நீங்கள் இயல்பாகவே பேசுங்கள்.
உங்களிடமிருந்து வார்த்தையை பிடுங்கி அதை ஹிட் ஆக்க நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் சாதாரணமாக பேசினாலே இண்டர்வியூ ஹிட் ஆகிவிடும் என கூறினேன். அதற்கு இல்லை சார் நான் ஆரம்ப காலத்தில் பேசும் போது எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.
இதனால் ஆங்கிலத்தில் கலந்து பேசினேன். அப்போது பலரும் இவர் என்ன பெரிய ஹாலிவுட் நடிகரா தமிழில் நடித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று சொன்னார்கள். சரி என்று தமிழில் பேசினேன். அப்போது எனக்கு எப்படி பேச வேண்டும் இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதெல்லாம் தெரியாது.
இதனால் நான் சொல்ல வந்த வார்த்தை வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டு அதுவும் பிரச்சனையானது. இதனால் இனி இன்டர்வியூ கொடுக்கக் கூடாது என பேசாமல் இருந்து விட்டேன். உடனே அஜித்துக்கு எவ்வளவு தலைகனம் பாரு பேசவே மாட்டிக்கிறார் என்று மீண்டும் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.
நான் என்ன செய்தாலும் என்னை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் நான் இன்று வரை தருவதில்லை என்று கூறினார். மேலும் அஜித் சினிமா பின்புலத்திலிருந்து வராததால் இன்டர்வியூவில் எப்படி பேச வேண்டும்.எப்படி பதில் தர வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை.
அவரே தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். அஜித் உண்மையிலே நல்ல மனுஷன் மிகவும் இயல்பாக இருப்பார்.தன் வாழ்க்கையை அவர் அழகாக வாழ்கிறார். அவர் படிக்கும் புத்தகங்களை எல்லாம் பார்த்தால் நாம் அதைக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம் என்று கோபிநாத் கூறியுள்ளார்.