பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் இயக்குனர்களிடம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு நடிகைகள் குறித்து பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறி பிரபலமானவர்தான் பயில்வான் ரங்கநாதன். இவர் 100க்கும் மேற்பட்ட படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
செந்தில் கடந்த கால வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அதில் நடிகர் செந்தில் ஆரம்பகாலத்தில் தேனாம்பேட்டையில் உள்ள சாராயக்கடையில் உதவியாளராக பணிபுரிந்ததாகவும், அப்போது அங்கு வரும் நடிகர்களின் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.
நடிகர் கவுண்டமணியும் செந்திலும் நல்ல நண்பர்களாக இருந்ததாகவும் இருவரும் இணைந்து 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்ட பயில்வான் ரங்கநாதன் இருவரும் பிரிந்ததற்கு மோதல், சண்டை என எந்த காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளார். நடிகர் கவுண்டமணிக்கு நாயகனாக நடிக்க வேண்டிய ஆசை வந்ததால் அவர் பட வாய்ப்புகளை மறுத்ததாகவும் இதனை பயன்படுத்திக் கொண்டு செந்தில் தனியாக காமெடிகள் நடித்ததாகவும் கூறியுள்ளார்.
நடிகர் செந்தில் நல்ல மனிதர் என்றும் ரஜினிகாந்துக்கு பிறகு வெளிநாட்டில் அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் காமெடி நடிகர் செந்தில் தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு செந்தில் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் இதனால் 2011 ஆம் ஆண்டு செந்திலை எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுமாறு கூறியதாகவும் ஆனால் அதற்கு செந்தில் தமக்கு படிக்க தெரியாது அதனால் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த வாய்ப்பு பிறகு கருணாஸுக்கு சென்று விட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் விளக்கம் அளித்துள்ளார். செந்திலுக்கு பணத்தை கூட எண்ண தெரியாது என்றும் வங்கியில் கணக்கு இல்லாததால் ஆரம்ப காலத்தில் ரொக்கமாகவே பணத்தை வாங்கி அதனை நிலத்தில் செந்தில் முதலீடு செய்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.