தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தங்களுடைய ரசிகர்கள் சங்கத்தை கலைத்தவர் என்றால் அதில் அஜித் தான் முதன்மையானவர். யாருமே செய்ய தயங்கும் அந்த காரியத்தை நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்து காட்டினார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்களுடைய துணை இருந்தது என்பது குறித்து துணை நடிகர் மதுரை மோகன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், சிட்டிசன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் உள்ள அரசினர் தோட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது துணை நடிகர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 50 முதல் 100 பேர் தான் நடிகர் சங்கத்திலிருந்து துணை நடிகர்கள் வந்திருந்தார்கள். இதை பார்த்ததும் இயக்குனர் சரவண சுப்பையா இந்த கூட்டம் போதாது என்றும் எனக்கு நிறைய கூட்டம் வேண்டும் என்று கூறினார்.
இதனை அடுத்து அவர் அஜித்திடம் உங்களுடைய ரசிகர்களை இங்கு அழைக்க முடியுமா என கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து நடிகர் அஜித் ஒரு போன் கால் தான் செய்தார் பத்து நிமிடங்களில் அந்த இடத்திற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியாத நிலைமை ஏற்பட்டது.
அப்போது நடிகர் அஜித்தை அழைத்து எங்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களிடம் மைக்கில் பேசினார். இது படத்தின் முக்கியமான காட்சி என்றும் கூட்டத்திற்காக தான் உங்களை அழைத்தோம் என்றும் இந்த காட்சியை சிறப்பாக முடித்துக் கொடுக்க தாங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அஜித்தின் பேச்சை அடுத்து ரசிகர்கள் அமைதியாக நின்றனர். இதனால் தான் படத்தில் முடிவில் பெயர் ஓடும் போது அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு கைகாட்டி நன்றி தெரிவிக்கும் காட்சியை படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் யாரும் துணை நடிகர்கள் அல்ல அனைவருமே அவருடைய ரசிகர்கள் என்று மதுரை மோகன் கூறினார்.