தமிழ் திரையுலகத்தில் மிகப்பிரமாண்டத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அடுத்த திரைப்படமான தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு ப்ரமோஷனை தொடங்க உள்ளது. தொலைக்காட்சியால் சினிமா தொழில் பாதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது தொலைக்காட்சிகளில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை விளம்பரம் மேற்கொண்டு தமிழ் திரையுலகில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சன் பிக்சர்ஸ் தாங்கள் வாங்கி வெளியிடும் திரைப்படங்களை பிரத்தியேகமாக விளம்பரம் செய்து படத்தை வெற்றி அடைய செய்யும். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மை காலங்களாக சரிவர விளம்பர பணிகளை மேற்கொள்ளவில்லை என்று பல்வேறு ரசிகர்களும் குற்றம் சாட்டினர். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படமும், பிப்ரவரியில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கும், கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கும் சன் பிக்சர்ஸ் போதிய விளம்பரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவை நடத்தாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெத்தனமாக இருந்ததாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை வேற லெவல் விளம்பரம் செய்ய வேண்டுமென சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக ஆரம்ப கட்டப் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. தாய்க்கிழவி பாடலுக்கு வித்தியாசமான புரோமோகளை வெளியிட்டு பாட்டை ஹிட் ஆக்கியது.
தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள கல்லூரியில் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்பட உள்ளது. இதில் திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் உடன் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார். திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார்.