இந்திய மற்றும் தமிழ் சினிமாவின் பெருமையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் தலைமை தாங்கி இயக்கியுள்ளார். இதன் முதல் பாகத்தை அக்டோபர் மாதம் வெளியிட்டனர். படத்திற்கு எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் புரிந்தது.
இதனைத் தொடர்ந்து உடனே இரண்டாம் பாகத்தின் பணிகளை துவங்கினார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகத்தின் படப்பிடிப்பும் ஒரே அடியாக எடுக்கப்பட்டது. எடிட்டிங் வேலைகள் மட்டுமே மிச்சம். அனைத்தும் முடிக்கப்பட்டு தற்போது படக்குழு இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் புரொமோஷன் செய்து வருகிறது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2.
படம் வருவதற்கு முன்பே பலர் கல்கியின் இந்த பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துவிட்டனர். புத்தகம் வாசித்தவர்கள் பலர் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகச் சிறப்பாக இல்லை எனக் கூறினார். காரணம் படத்தில் நிறைய காட்சிகளை சேர்க்காததே. அதே போல பலர் பொன்னியின் செல்வனை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல ஓர் வெப் சீரிஸாக எடுத்திருக்கலாமே என பேசினார்.
பொன்னியின் செல்வன் 2 புரொமோஷன் பணிகளின் போது நேர்காணல் ஒன்றில் இதே கேள்வியை மணிரத்னமிடம் நேரடியாக எழுப்பினர். “ இரண்டு பாகங்களாக படம் செய்ததற்கு இன்னும் சுதந்திரத்தோடு வெப் சீரிஸாக எடுத்திருக்கலாமே ? ” என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் தெளிவான பதில் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, “ சரி தான். ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும் மேலும் நடிகர்களின் தேதிகளைப் பெறுவது கடினம். அதனால் தான் படமாக உருவாக்கியுள்ளேன். ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை 2 பாகங்களாக்கி அதற்கு நியாயம் வழங்கி இருக்கிறேனே இல்லையா என எனக்குத் தெரியவில்லை ஆனால் அதைப் படமாக்கிவிட்டேன் என்ற திருப்தி எனக்கு கிடைத்துள்ளது. ” என்றார் மணிரத்னம்.
இயக்குனர் மணிரத்னம் கூறியது நிச்சயம் ஏற்றுக் கொள்ளும் பதிலே. மிகப் பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்ட இந்தப் படத்தை அதே நடிகர்கள் வைத்து வெப் சீரிஸாக எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. 293 அத்தியாயங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களில் அடக்குவதும் கடினமே. மணிரத்னம் அவர்கள் தன்னால் முடிந்ததை செய்துள்ளார்.