நடிகர் விக்ரம் ,பா. ரஞ்சித் இணைந்து முதல் முறையாக பணியாற்றும் திரைப்படம் தான் தங்கலான். கேஜிஎப் தங்க சுரங்கத்தில் நடைபெறும் உழைப்பு சுரண்டல்கள் மற்றும் கொடுமைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் விக்ரம் வித்தியாசமான கேரக்டரிலும் தோற்றத்திலும் இந்த படத்தில் காட்சியளிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் குறித்து முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். அதில் தங்கலான் திரைப்படம் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார். எஞ்சி உள்ள 20 சதவீதத்தை மே மாதத்திற்குள் முடித்து விடுவோம் என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கியிருக்கிறது. இந்த படத்திற்காக ஒரு பெரிய குழுவே இரவும் பகலுமாக உழைத்திருக்கிறோம். இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன். படப்பிடிப்பு முடிந்தாலும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
இந்த கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க சில காலம் ஆகும். இதனால் இந்த படம் நடப்பாண்டு இறுதியில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. அனைவருக்கும் இந்த படம் ஒரு புதிய அனுபவத்தையும் பிடித்த படமாகவும் அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
நடிகர் விக்ரமை பொறுத்தவரை கடைசியாக அவர் நடித்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தங்கலான் மூலம் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் விக்ரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .